கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் மில் மற்றும் நிறுவனங்களில் தங்கி வேலை செய்யும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களை கணக்கெடுக்க கமிஷனர் சரவணன் சுந்தர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் காவல்துறையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் துடியலூர் அருகே உள்ள குருடம்பாளையம் அடுத்த தொப்பம்பட்டியில் ஒரு தனியார் நிறுவனத்தில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் சட்ட விரோதமான முறையில் வங்காளதேசத்தை சேர்ந்த சொரீப்(32) மற்றும் அவருடைய தம்பி லோதிப் அலி (29) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 3 வருடமாக சொரீப் வேலை பார்த்து வருவதாகவும், அவரது தம்பி கடந்த ஒரு வருடமாக வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், நேற்று வீரியம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் ஏராளமான வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 13 பேருக்கு எந்த வித ஆவணங்களும் இல்லாமல் வேலை பார்த்து வந்துள்ளனர். அதனால் 13 பேரையும் அழைத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவருமே வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அந்த தனியார்  மில்லில் வேலை பார்த்து வந்த வங்காளதேசத்தவர்கள், பாப்லு(26), சமீர் (19), அல் அமீன் (24), ஷேஹாக்(26), போனி (30), ரூஷல் (42), முகமது அல்டாப் (45), டைட்டா (24), அரபத் (22), சையோன்(32), ரஷீத் (22) ஆகியோரை கைது செய்து கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதன் பின் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.