நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 120 இடங்கள் வரை வென்று ஆட்சி அமைக்கும் எனத் துல்லியமாகக் கணித்துக் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரவி. தனது 31 ஆண்டுகால காவல்துறை கள அனுபவத்தை வைத்தும், முன்னாள் காவல்துறை நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்களைப் பயன்படுத்தியும் இந்த ஆய்வை அவர் நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 75,000 வாக்குச்சாவடிகளில், தொகுதிக்கு தலா 1000 வாக்காளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடம் எளிய கேள்விகள் கேட்டுத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. குறிப்பாகப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிகம் உள்ள பூத்களைத் தனித்தனியாகப் பிரித்து, அவர்கள் தற்போதும் கடந்தகாலத்திலும் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ஒப்பிட்டு ஆய்வின் மூலமே தவெக 121 இடங்களைக் கைப்பற்றும் என்ற துல்லியமான தேர்தல் முடிவைக் கணிக்க முடிந்ததாக அவர் விவரித்துள்ளார்.

1968-இல் தனது 6 வயதில் அறிஞர் அண்ணாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றது முதலே அரசியல் சூழலில் வளர்ந்தவர் ரவி. இவரது தந்தை 1977 தேர்தலில் போட்டியிட்டவர் என்பதால் சிறு வயது முதலே தேர்தல் பிரசார அனுபவமும் இவருக்கு உண்டு. “அரசியலுக்கு வர வேண்டாம்” என்ற தனது தந்தையின் அறிவுரையைக் கடைப்பிடித்து வரும் ரவி, தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் 10 நாள் ஆட்சி முறையைப் பாராட்டியுள்ளார்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருக்கக்கூடாது என்ற விஜய்யின் அதிரடி உத்தரவு மற்றும் சிங்கப்பெண் திட்டம்,அரசியல் சார்பின்றி அதிகாரிகளைத் தேர்வு செய்யும் முறை ஆகிய மக்கள் நலன் சார்ந்த முடிவுகளுக்காக சி.எம் விஜய்க்கு ரவி 100-க்கு 100 மதிப்பெண்கள் வழங்கி நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.