மதுரை ஆரப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி கழிவறை கட்டிடங்கள் போன்றவற்றை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நிதிநிலை நன்றாக முன்னேறிய நிலையில், ஜெயலலிதா சிறைக்கு சென்றது மற்றும் உடல் நலம் சரி இல்லாமல் போனது மற்றும் அவருடைய மறைவுக்கு பிறகு நிதி நிலைமை மிகவும் மோசமானது. தற்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் மீண்டும் நிதிநிலை சீரடைந்து வருகிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை நிதிநிலை ஆய்வு செய்யப்படும் நிலையில், அதில் சில குழப்பங்கள் இருக்கிறது.

பல திட்டங்கள் ஒன்றிய அரசின் திட்டங்கள் என்று சொல்லப்படும் நிலையில் ஒன்றிய அரசு நிதி முழுமையாக திட்டங்களுக்கு வருவது கிடையாது. ஒன்றிய அரசு நிதி வராமல் நம்மால் திட்டங்களை செயல்படுத்த முடியாது. அடுத்த நிதியாண்டு கண்டிப்பாக நல்ல நிதியாண்டாக இருக்கும். அதன் பிறகு ஜெயலலிதா அறிமுகப்படுத்திய விஷன் 2023 என்று திட்டம் நல்ல திட்டம். இந்த திட்டத்தை நாங்களும் பின்பற்ற விரும்புகிறோம். மேலும் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் தரவுதளம் அமைத்தல், பயனாளர்களின் உண்மை தன்மையை கண்டறிதல் போன்ற 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான முடிவை 2023 ஆம் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டில் முதல்வர் எடுப்பார் என்று கூறினார்.