மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியான அசோக் காரத் (67), தன்னை ஒரு ஜோதிடர் என்றும், தனக்குத் தெய்வீக சக்தி இருப்பதாகவும் கூறி பல பெண்களைக் கவர்ந்துள்ளார். “உன் கணவன் இறந்துவிடுவான், குடும்பத்தினர் உயிரிழந்துவிடுவர்” எனச் சூனியம் வைப்பதாக மிரட்டியும், ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் பாம்புகள் மற்றும் புலித்தோல்களைக் காட்டிப் பயமுறுத்தியும் பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
3 ஆண்டுகளாகப் பெண் ஒருவரைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கடந்த மார்ச் 18-ஆம் தேதி இவர் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் இவர் வைத்திருந்த தகாத உறவு சார்ந்த பாலியல் வீடியோக்கள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவருக்குப் பின்னணியில் பல அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சீடர்களாக இருக்கும் அரசியல், பண பலமும் அம்பலமாகியுள்ளது.
அசோக் காரத்துக்கு எதிராகப் பாய்ந்த பாலியல் சுரண்டல் புகார்களைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை நடத்திய அதிரடி சோதனையில் பல திடுக்கிடும் பொருளாதாரக் குற்றங்கள் வெளிவந்துள்ளன. மரண பயத்தில் இவரை நாடி வந்த பக்தர்களிடம் இருந்து ஒருவர் ரூ.5.6 கோடியும், மற்றொருவர் ரூ.3.8 கோடியும் என மொத்தம் 70 கோடி ரூபாய் வரை இவர் மோசடி செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு வந்த பணத்தை மறைப்பதற்காக, வெவ்வேறு நபர்களின் பெயரில் அவர்களுக்குத் தெரியாமலேயே 60 தனிநபர் வங்கி கணக்குகளைத் தொடங்கிப்பணத்தைச் செலுத்தியுள்ளார். அந்த கணக்குகள் அனைத்திலும் தனது மொபைல் எண்ணை இணைத்து, தன்னையே ‘நாமினி’யாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மெகா மோசடிக்கு அவரது உதவியாளர் அரவிந்த் பவாகேவும் துணையாக இருந்துள்ள விபரம் விசாரணையில் தெரியவந்துள்ளது.
