சென்னை ஆவடி காவல்துறையினருக்கு, ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி செங்குன்றம் அடுத்துள்ள நல்லூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த பேருந்தில் இருந்தவர்களிடம் சோதனை செய்தனர். அதில் இருந்து ஒருவரின் பையை சோதனை செய்த போது 2 பண்டல்களில் கஞ்சா இருந்துள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ்(29) என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சூலூர்பேட்டை வந்ததாகவும், அதன் பின் அங்கிருந்து பேருந்து வழியாக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.