கடந்த 10 ஆண்டுகளைக் கடந்தும் நீட் தேர்வை எந்தவிதமான குளறுபடிகளும் இல்லாமல் நடத்த மத்திய அரசு தவறிவிட்டது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறிப்பாக வட மாநிலங்களில் தொடர்ந்து நீட் தேர்வில் குளறுபடிகள் நடந்தேறி வருவது வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வினாத்தாள் கசிந்த காரணத்திற்காக மறுதேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு, மாணவர்களுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை உண்டாக்கும் என்றும் அவர் சாடியுள்ளார்.

​எனவே, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பதைப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு முதன்மை கோரிக்கையாக வலியுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்தத் தேர்வு முறையை ரத்து செய்வதே சரியான தீர்வாக இருக்கும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு குறித்த ஜவாஹிருல்லாவின் இந்த அதிரடி அறிக்கை, மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.