உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் பணியாற்றும் ஹெட் கான்ஸ்டபிள் அஷ்வினி மாலிக், தனது இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் 77 வயது முதியவரான ரஸூமா பானோவை, 10 ஆண்டுகளாக காணாமல் போன அவரது ஒரே மகன் சலீமுடன் மீண்டும் சேர்த்து வைத்துள்ளார். 45 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட அஷ்வினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோ, மும்பையில் உள்ள ஒரு நபரின் கவனத்தை ஈர்த்தது. அந்த வீடியோவில் இருந்த நபர் தனது காணாமல் போன உறவினர் சலீம் என உறுதியானதும், அவரது குடும்பத்தினர் உடனடியாக அம்ரோஹா காவல்துறையைத் தொடர்பு கொண்டனர்.

வீடியோ அழைப்பு மூலம் சலீம் என்பதை உறுதி செய்தபோது, ரஸூமா பானோவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. 10 ஆண்டுகளாக தன் மகனைப் பிரிந்திருந்த அவர், மகனை மீண்டும் சந்தித்த தருணத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினார். அம்ரோஹா காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் ஆனந்தின் முன்னிலையில், சலீமின் குடும்பத்தினர் அம்ரோஹாவுக்கு வந்து, மகனை மீட்டனர். ரஸூமா பானோ தன் மகனை கட்டிப்பிடித்து அழுதபோது, மனநிலை பாதிக்கப்பட்டிருந்த சலீம், தாயின் அரவணைப்பில் அமைதியடைந்தார்.

இது அஷ்வினி மாலிக்கின் ஐந்தாவது வெற்றிகரமான முயற்சியாகும், இதற்கு முன்பு நான்கு முறை அவரது சமூக ஊடக பதிவுகள் மூலம் காணாமல் போனவர்களை அவர்களது குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளார். இது குறித்து அஷ்வினி கூறுகையில், “சமூக ஊடகத்தை சரியாகப் பயன்படுத்தினால், லட்சக்கணக்கான மக்களுக்கு உதவ முடியும். எந்தக் குடும்பமும் பிரிந்து விடக்கூடாது என்பதே என் விருப்பம்,” என்றார். காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் ஆனந்த், இதை காவல்துறையின் மனிதநேயத்தின் எடுத்துக்காட்டாகப் பாராட்டினார்.