உலகமே அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டிருக்க, ஒரு நாடு மட்டும் இருண்ட காலத்தை நோக்கிப் பின்னோக்கிப் பயணிக்கிறது. ஆம், தாலிபான்களின் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான் தான் அது! அங்குள்ள பெண் குழந்தைகளின் கல்விக்கனவு, அடிப்படைவாத சிந்தனையால் சுக்குநூறாகத் தகர்க்கப்பட்டுள்ளது குறித்து ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பு நெஞ்சைப் பிழியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகிலேயே பெண்களுக்குப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை முற்றிலுமாகத் தடை செய்துள்ள ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டுமே. 2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தாலிபான்கள், தங்கள் பிற்போக்குத்தனமான எண்ணங்களைச் செயல்படுத்தத் தொடங்கினர்.
அதன் நீட்சியாக, 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும், அதே ஆண்டு டிசம்பரில் பல்கலைக்கழகக் கல்வியையும் ஈவுஇரக்கமின்றித் தடை செய்தனர். இதன் கோர விளைவாக, ஆரம்பக் கல்வியை முடித்துவிட்டு உயர்நிலைப் பள்ளியில் நுழைய முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 24 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விடக் கூடுதலாக 2 லட்சம் சிறுமிகள் தங்கள் பள்ளிக் கல்வியை இழந்துள்ளனர் என்பது வேதனையின் உச்சம்.
இதே நிலை நீடித்தால், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் கல்வி மறுக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டும் என ஐ.நா சபை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளில் ஆண் மாணவர்களுக்குப் பெண் ஆசிரியர்கள் பாடம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கல்வித்துறையில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. 2030-க்குள் சுமார் 11,000 தகுதியான பெண் ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆரம்பக் கல்வியின் நிலைமையோ இதைவிட மோசம். 10 வயதுடைய குழந்தைகளில் 90% பேருக்கு ஒரு எளிய வாக்கியத்தைக் கூடப் படிக்கத் தெரியவில்லை என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் வெறும் 37% ஆகக் குறைந்து அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. பள்ளிகளின் உள்கட்டமைப்பைப் பார்த்தால், பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் குடிக்கத் தண்ணீர் கூட இல்லை; சுகாதாரமான கழிப்பறைகளும் இல்லை.
இத்தனை அவலங்களுக்குப் பிறகும், சர்வதேச நாடுகளின் கடுமையான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் தாலிபான்கள் துளியும் பொருட்படுத்தவில்லை. “பெண்களுக்கான கல்வித் தடை என்பது எங்களின் உள்நாட்டு விவகாரம்” என்று ஆணவத்துடன் பிடிவாதம் காட்டி வருகின்றனர். இப்படி ஒரு தலைமுறையின் கல்வியையே பாழாக்குவது ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தையும் பொருளாதாரத்தையும் குழிதோண்டிப் புதைத்துவிடும் எனச் சர்வதேச சமூகம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
