இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியிடமிருந்து பிரிந்த அவரது மனைவி ஹசின் ஜஹான், தனக்கு மாதம் ₹10 லட்சம் ஜீவனாம்சம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஷமி தரப்பில் ஏற்கெனவே ₹4 லட்சம் ஜீவனாம்சம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த கூடுதல் கோரிக்கை சமூக வலைதளங்களில் பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது. விவாகரத்து பெறும் சமயத்தில் ஜீவனாம்சமாக கேட்கப்படும் தொகைகள், ஒருவரின் வாழ்க்கைத்தரத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாகவும், மறுபுறம் பிரிந்த இருவரின் நியாயமான எதிர்பார்ப்புகளாகவும் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக பிரபலங்களின் விவாகரத்து ஜீவனாம்சம், பொதுவெளியில் பேசுபொருளாகி, சட்டரீதியான நியாயங்களை விட உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளையே அதிகம் பெறுகிறது.
இந்தச் சூழலில், ஷமிக்கு எதிராக ஹசின் ஜஹான் வைத்திருக்கும் இந்தக் கோரிக்கை சட்டத்தின் முன் எத்தகைய ஆதாரங்களைப் பெறும், மேலும், ஒரு கிரிக்கெட் வீரரின் வருமானம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளின் அடிப்படையில் இந்தத் தொகை நியாயமானதா என்ற கேள்விகள் எழுகின்றன. இணையத்தில் ஆதரவாகவும் எதிராகவும் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு, ஜீவனாம்சம் தொடர்பான பல வழக்குகளுக்கு ஒரு முக்கியமான முன்மாதிரியாக அமையக்கூடும். இந்த வழக்கின் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன?
