இந்தியாவில் ரிசர்வ் வங்கி கடந்த 2009 ஆம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வரை 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ்  வங்கி தொடர்ந்து வெளியிட்டது. அதன்படி 14 முறை 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்ட நிலையில் இன்று வரை அந்த நாணயங்கள் செல்லுமா செல்லாதா என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இருப்பினும் ரிசர்வ் வங்கி பலமுறை 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று அறிவித்துள்ளது. ஏனெனில் சிறு கடைகள், காய்கறி கடைகள் போன்றவைகளில் கூட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்.

குறிப்பாக கிழிந்து போன மற்றும் கசங்கி இருக்கும் 10 ரூபாய் நோட்டுகளை மக்கள் வாங்கும் நிலையில் நாணயங்களை மட்டும் வாங்க மறுக்கிறார்கள். இதன் காரணமாக‌ நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இல்லாமல் குவிந்து கிடக்கிறது. அதன்படி விஜயவாடாவில் உள்ள ஒரு வங்கியில் மட்டும் 12 லட்ச ரூபாய் மதிப்பிலான நாணயங்கள் குவிந்துள்ளது. இதேபோன்று நாடு முழுவதும் பல வங்கிகளில் கோடிக்கணக்கான நாணயங்கள் புழக்கத்தில் இல்லாமல் இருக்கிறது. மேலும் இது ரிசர்வ் வங்கிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து அது தொடர்பாக விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகிறது.