
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரம் இளைஞர்கள் யுத்த களத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம். பத்து நாட்கள் மட்டும் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி கொடுத்தால் போதும். எல்லையைக் காப்பதற்கு என்னுடைய தலைமையில் கண்டிப்பாக இளைஞர் படை தயக்கம் இன்றி செல்லும். தீவிரவாதத்திற்கு எதிராக அதிமுகவின் பங்கு நிச்சயமாக இருக்கும். அதிமுகவினர் தேசப்பற்று கொண்டவர்கள் என்பதற்கு அடையாளமாக எப்போதுமே நாங்கள் யுத்தத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம் என்று கூறினார். மேலும் காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் தகர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.