திமுக கூட்டணியில் 10 தொகுதிகளைப் பெற்று நிம்மதியடைந்த தேமுதிகவுக்கு, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின் போது விழுந்த ‘நோ’ இப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தான் போட்டியிடத் திட்டமிட்டுள்ள ரிஷிவந்தியம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய முக்கிய தொகுதிகளின் பட்டியலை திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவிடம் வழங்கியுள்ளார்.

ஆனால், அந்த இரண்டு தொகுதிகளையும் திமுக தர மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, விஜயகாந்த் வெற்றி பெற்ற ராசியான தொகுதியான ரிஷிவந்தியத்தை விட்டுக்கொடுக்க திமுக முன்வராதது தேமுதிக தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

​”கூட்டணியில் 10 சீட் கொடுத்தும், நாங்கள் விரும்பும் தொகுதியைத் தர மறுப்பதா?” எனக் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ரிஷிவந்தியத்தில் போட்டியிட்டுத் தனது அரசியல் பலத்தை நிரூபிக்கத் திட்டமிட்டிருந்த பிரேமலதாவுக்கு, திமுகவின் இந்த அதிரடி முடிவு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. விருகம்பாக்கம் தொகுதியையும் திமுக தன் வசமே வைத்துக்கொள்ள விரும்புவதால், தேமுதிகவுக்கு வேறு எந்தத் தொகுதிகளை ஒதுக்கலாம் என்பதில் இழுபறி நீடிக்கிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், இந்தத் தொகுதிப் பிடிவாதம் திமுக-தேமுதிக கூட்டணியில் ஒரு விதமான விரிசலை ஏற்படுத்தியுள்ளது.