ஒரு மென்பொருள் பொறியாளர் ஆறு ஆண்டுகள் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இரவு பகலாக உழைத்தார். ஆனால், 10% சம்பள உயர்வு கேட்டபோது, நிறுவனம் அவரை வெளியேறச் சொன்னது. இந்த முடிவு நிறுவனத்தின் உயர் மேலாண்மையையே பாதித்தது.

பொறியாளர் நிறுவனத்தின் முக்கிய பின்புல அமைப்புகளை (backend systems) தனியாக கவனித்து வந்தார். இவை டிராப்பாக்ஸ் போன்ற முக்கிய தரவு ஒத்திசைவு கருவிகளைப் போலவே இருந்தன. ஆனால், அவரது சம்பளம் சக ஊழியர்களை விட 10% குறைவாக இருந்தது. சம்பளத்தை சமப்படுத்தக் கேட்டபோது, மேலாண்மை மறுத்துவிட்டது. இதனால், அவர் வேலை செய்யும் முறையை மாற்றினார். ரெடிட் தளத்தில் அவர் எழுதியதாவது: “நான் வேலை நேரத்தை குறைத்து, என் விருப்பப்படி மணி நேரங்களை அமைத்தேன், குறிப்பிட்ட ‘முக்கிய நேரங்களை’ பொருட்படுத்தவில்லை.”

புதிய இயக்குநர் வந்தபோது, பொறியாளர் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வேலை செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினார். பொறியாளர் உண்மையை ஒப்புக்கொண்டு, காரணத்தையும் விளக்கினார். ஆனால், ஒரு மாதத்தில் நிறுவனம் அவரை “வேலை கைவிடல்” என்ற காரணத்தைக் காட்டி பணி நீக்கம் செய்தது. பின்னர், அவரது இடத்தை நிரப்ப ஆறு புதிய ஊழியர்களை நிறுவனம் நியமித்தது. ஆனாலும், மென்பொருளில் பிழைகள் அதிகரித்தன,

வாடிக்கையாளர்கள் குறைந்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்தது. இதனால், பொறியாளரை பணி நீக்கிய இயக்குநரும், அவரை நியமித்த துணைத் தலைவரும் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதை அறிந்த பொறியாளர் ரெடிட்டில்  “10% சம்பள உயர்வு கொடுத்திருந்தால் இவை தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த உலகில் இன்னும் சிறிது நீதி இருப்பதைப் பார்த்து சிரிப்பு வந்தது.” என்று பதிவிட்டுள்ளார்.