ஹரியானா மாநிலம் குரூகிராமில் 22 வயது காஜல் என்ற இளம்பெண் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது அழகால் இளைஞர்களை ஈர்த்து, திருமணம் என்ற பெயரில் அவர்களை ஏமாற்றி, பணம், நகைகள் மற்றும் பொருட்களைத் திருடி தப்பி ஓடியதாக குற்றச்சாட்டு உள்ளது. காஜல் தனது தந்தை பகத் சிங், தாய் சரோஜ் தேவி, சகோதரி தமன்னா ஆகியோருடன் சேர்ந்து இந்த தொழில்முறை ஏமாற்று கும்பலை நடத்தியுள்ளார்.

இவர்கள் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றியுள்ளனர். 2024 மே மாதம், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பகத் சிங், ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த தாராசந்த் ஜாட்டை சந்தித்து, தனது மகள்கள் காஜல் மற்றும் தமன்னாவை ஜாட்டின் மகன்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்தார். இதற்காக 11 லட்சம் ரூபாய் பணம், நகைகள், ஆடைகள் கொடுக்கப்பட்டன. ஆனால், திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன், காஜல் உள்ளிட்ட குடும்பத்தினர் திருடிய பொருட்களுடன் தப்பி ஓடினர்.

சிகார் காவல்துறை வழக்கு பதிவு செய்து, பகத் சிங், அவரது மனைவி, தமன்னா ஆகியோரை கைது செய்தது. காஜல், தலைமறைவாக இருந்த நிலையில் ராஜஸ்தான் மற்றும் குரூகிராம் காவல்துறை இணைந்து அவரை கைது செய்தது. இந்த குழு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது.