சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளாகிய இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து இருக்கை விகாரம் தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு அந்த கோரிக்கையை நிராகரித்திருக்கிறார். இருக்கை விவகாரம் குறித்து சபாநாயகர் அப்பாவு மீண்டும் விளக்கமும் அளித்திருக்கின்றார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்பி உதயகுமாருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக 10 முறை கடிதம் எழுதியும் கூட சபாநாயகர் அப்பாவு அதனை கண்டு கொள்ளவில்லை எனவும் குற்றம் சுமத்தி இபிஎஸ் சட்டப்பேரவையில் பேசியிருந்தார்.

இருக்கை ஒதுக்கீடு என்பது சபாநாயகரின் உரிமைக்கு உட்பட்டது. அதனை எதிர்க்கட்சித தலைவர் கேள்வி கேட்க முடியாது என சபாநாயகர் அதற்கு விளக்கம் அளித்து இருந்தார். மேலும் அவர் பல்வேறு கருத்துக்களையும் பதிவு செய்திருந்தார். பேரவைக்கு இடையூறு செய்த காரணத்தினால் அதிமுகவினரை வெளியேற்றுமாறு அவர் உத்தரவு பிறப்பித்தார்.,

இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார்கள். மேலும் சபாநாயகர் அப்பாவு இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.