குஜராத் மாநிலம் பவநகர் நகரில், டெக்ரி சவுக் அருகே உள்ள  ஏரி பகுதியில், தங்கள் திருமணத்திற்குச் சரியாக ஒரு மணி நேரத்திற்கு முன், மாப்பிள்ளை (Sajan Baraiya), மணப்பெண்ணாக (Soni Himmat Rathod) இருந்த தன் வருங்கால மனைவியைக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

சஜன் பரையா மற்றும் சோனி ஹிம்மத் ரத்தோர் இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்குள் புடவை மற்றும் பணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதமே இந்தக் கொடூரக் கொலைக்குக் காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருமணச் சடங்குகள் பெரும்பாலானவை முடிவடைந்த நிலையில், சனிக்கிழமை இரவு அவர்களுக்குத் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால், சண்டையின் போது ஆத்திரமடைந்த சஜன், சோனியை இரும்புக் கம்பியால் தாக்கியதோடு, அவரது தலையைச் சுவரில் மோதிக் கொலை செய்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே சோனி பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத்தினர் எதிர்ப்புக்கு மத்தியிலும் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இந்தக் கொலையை நிகழ்த்திய பின்னர் குற்றவாளி தப்பியோடினார்.

போலீசார் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக டி.எஸ்.பி. ஆர்.ஆர். சிங்ஹால் தெரிவித்துள்ளார்.