மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஓய்வு பெற்ற நீதிபதியின் மருமகள் ட்விஷா சர்மா தற்கொலை செய்துகொண்ட சோகம் அடங்குவதற்குள், நொய்டாவிலும் வரதட்சணை கொடுமையால் ஒரு இளம் பெண் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரேட்டர் நொய்டாவின் ஜல்புரா கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான தீபிகா என்ற பெண்ணுக்கும், ரித்திக் என்பவருக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது பெண்ணின் வீட்டார் தரப்பில் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் பணமும், அதிநவீன ஃபார்ச்சூனர் காரும் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு தீபிகாவைத் தொடர்ந்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்தத் தொடர் சித்திரவதையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபிகா, கடந்த மே 17ஆம் தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
படுகாயமடைந்த அவரை மீட்க முயன்றும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இகோடெக் 3 காவல் நிலைய போலீஸார், தீபிகாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
அவரது உடலில் பல காயங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தீபிகாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீபிகாவின் கணவர் ரித்திக் மற்றும் மாமனார் மனோஜ் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
