தெலங்கானாவில் சமூக வலைதளங்கள் மூலம் அரங்கேறிய ஒரு மிகப்பெரிய மோசடியை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர். ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம் ஆண்களுக்கு வலை விரித்துள்ளனர். மனைவி அழகாகப் பேசி ஆண்களைக் கவர்ந்து நேரில் வரவழைக்க, அவர்கள் தனிமையில் இருக்கும்போது கணவர் திடீரென நுழைந்து வீடியோ எடுத்துள்ளார். இப்படி எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து மிரட்டி, கிட்டத்தட்ட 1001 ஆண்களிடம் பல லட்சம் ரூபாயைச் சுருட்டியுள்ளனர். இத்தனை பேர் இந்தத் தம்பதியிடம் சிக்கியது அந்தப் பகுதியையே அதிர வைத்துள்ளது.

​இந்த மோசடி கும்பல் ஒரு நபரைக் குறிவைத்து அவரிடமிருந்து ஏற்கனவே ₹14 லட்சம் வரை பறித்துள்ளனர். ஆசை அடங்காத அந்தத் தம்பதி, மீண்டும் அவரிடம் ₹5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். பொறுமை இழந்த அந்த நபர் தைரியமாகப் போலீசில் புகார் அளிக்க, தம்பதியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், இவர்கள் ஒரு மிகப்பெரிய நெட்வொர்க்கையே நடத்தி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகும்போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு பெரிய பாடம்.