மும்பையில் நடந்துள்ள நெகிழ்ச்சியான இந்தச் சம்பவம், சோசியல் மீடியாவில் வைரலாகி அனைவரின் இதயங்களையும் வென்று வருகிறது. மும்பையைச் சேர்ந்த ‘ஹிங்லீஸ்’ (Hinglish) நிறுவனத்தின் சிஇஓ சுபம், தனது வெளிநாட்டு வாடிக்கையாளரைச் சந்திக்கும் அவசரத்தில், ₹156 ஆட்டோ கட்டணத்திற்குப் பதிலாகத் தவறுதலாக ₹15,682-ஐ ஆன்லைனில் அனுப்பிவிட்டுச் சென்றுள்ளார். பிசினஸ் மீட்டிங் சரியாகப் போகாத விரக்தியில் அவர் கீழே வந்தபோது, ஆட்டோ டிரைவர் அல்தாப் அங்கேயே அவருக்காகக் காத்திருந்து, அந்த மொத்தப் பணத்தையும் அவரிடமே பத்திரமாகத் திருப்பி ஒப்படைத்துள்ளார்.

​இதைவிட நெகிழ்ச்சியாக, அன்று அதுதான் தனது முதல் சவாரி (போணி) என்பதால், நேர்மைக்குக் கிடைத்தப் பரிசாக அந்த ₹156 கட்டணத்தைக்கூட வாங்க அல்தாப் மறுத்துவிட்டார். ஒரு வாரம் கழித்து அந்த பிசினஸ் டீல் ஓகே ஆன மகிழ்ச்சியான தருணத்திலும், சுபமிற்கு அல்தாஃபின் முகம் தான் நினைவுக்கு வந்துள்ளது; உடனே அவருக்கு ₹500 அனுப்பித் தனது நன்றிக்கடனைச் செலுத்தியுள்ளார். “நம்மை யாரும் கவனிக்காத நேரத்திலும் நேர்மையாக இருப்பதுதான் உண்மையான நேர்மை” என சுபம் பகிர்ந்துள்ள இந்த வைரல் பதிவு, மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்துகிறது.