மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் சினாவர் நகரில் தங்கிய காதல் ஜோடியை ரகசியமாக வீடியோ எடுத்து, அதை வைரலாக்குவதாக மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 வயதுடைய ஒருவர் யூனிவர்சிட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “நான் எனது தோழியுடன் ஒரு ஓட்டலில் 5 மணிநேரம் தங்கினோம். ரூ.1,200 கட்டணமாக செலுத்திவிட்டு திரும்பிவிட்டோம். 6 நாட்கள் கழித்து ஒரு மர்ம நபர் வாட்ஸ்அப் செய்தி அனுப்பி, ஓட்டலில் எடுக்கப்பட்ட எனது வீடியோக்கள் இருப்பதாகவும், ரூ.1 லட்சம் தராவிட்டால் வைரலாக்குவதாகவும் மிரட்டினார்” என தெரிவித்துள்ளார்.
பயம் அடைந்த அவர், பணம் ஏற்பாடு செய்ய 6 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். ஆனால், மிரட்டல்காரர் 2 நாளுக்குள் பணம் வேண்டும் என கேட்டுள்ளனர். அதனால் பயந்து, சம்பந்தப்பட்ட வாலிபர் ரூ.5,000 ஆன்லைனில் அனுப்பினார். ஆனால், மீதமுள்ள ரூ.95,000 கிடைக்கவில்லை என்றால் வீடியோவை அழிக்க முடியாது என மறுபடியும் அழுத்தம் வந்துள்ளது.
புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. வீடியோ எடுத்து மிரட்டியவர் வேறு யாரும் இல்லை – அந்த வாலிபரின் தோழியின் (காதலியின்) தோழியே இந்த செயலில் ஈடுபட்டவர். ஜுஜார்பூர் தாதியா பகுதியைச் சேர்ந்த, இன்ஜினீயரிங் படிக்கும் மாணவியுடன், அவரது நண்பர் மற்றும் மற்றொரு வாலிபரும் சேர்ந்தே இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றி போலீசார் தெரிவித்ததாவது:
“காதலி வாலிபருடன் ஓட்டலுக்குச் செல்லும் போது, தோழியும் உடன் சென்றுள்ளார். அந்த ஓட்டலில் பல்பின் பின்னால் ஸ்பை கேமரா வைத்து ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. பின்னர், அவரை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கப்பட்டது.” மேலும், இந்தக் குழுவினர் வாலிபரிடம் “உங்களுக்கு உதவ பணம் தர தயாராக இருக்கிறோம்” என்று நடித்து நெருக்கத்தை வளர்த்துள்ளதுடன், வலைவீச்சை சிறப்பாக அமைத்திருந்தனர். இதுவரை 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
