நடந்து முடிந்த 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த வரலாற்று வெற்றியை ஒட்டுமொத்த அணியினரும் மைதானத்தில் உற்சாகமாகக் கொண்டாடிய போது, ஆர்சிபி அணியின் வெளிநாட்டு நட்சத்திர வீரர்களான டிம் டேவிட் மற்றும் பில் சால்ட் ஆகிய இருவரும் இணைந்து தங்களது தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி பிளவரிடம் செய்த குறும்புத்தனம் தற்பொழுது இணையத்தில் பெரிய அளவில் பேசும்பொருளாக மாறியுள்ளது.

மைதானத்தில் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்ற வீரர்களுடன் மிகவும் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்த தருணத்தைப் பயன்படுத்திய இந்த இரு குறும்புக்கார வீரர்களும், அவருக்குத் தெரியாமல் ஐஸ் கட்டிகள் நிறைந்த ஒரு பெரிய கூலர் பாக்ஸை தூக்கிக் கொண்டு பின்னாடியே சென்றுள்ளனர்.

அவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த ஐஸ் கட்டிகள் முழுவதையும் ஆண்டி பிளவரின் தலையில் கொட்டி நனைய வைத்ததும், சுற்றியிருந்த மற்ற வீரர்களும் பயிற்றுவிப்பாளர்களும் கைகளைத் தட்டிச் சிரித்துக் கொண்டாடியுள்ளனர். கிரிக்கெட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ள இந்த எளிய மற்றும் எதார்த்தமான கொண்டாட்ட வீடியோ, தற்பொழுது சமூக வலைத்தள பக்கங்களில் படுவேகமாகப் பரவி இணையம் எங்கும் செம வைரலாகி வருகிறது.