உலகப் புகழ்பெற்ற ‘ஹாரி பாட்டர்’ திரைப்படத் தொடரில் வரும் ‘டாம் ரிடில்’ கதாபாத்திரத்தின் மந்திரி டைரியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
அதில் நாம் எழுதுவதற்குத் தகுந்தவாறு அந்த டைரி தானாகவே நமக்கு மறுபதில் எழுதும் வித்தை காட்டப்பட்டிருக்கும். தற்சமயம் அதே போன்ற ஒரு அதிசய இ-டைரியை நிஜ உலகிற்கு கொண்டு வந்துள்ளார் கனடாவைச் சேர்ந்த மாக்சிம் ரிவெஸ்ட் என்ற மென்பொருள் டெவலப்பர். நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையோடு இந்த மாயாஜால டைரியை அவர் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார்.
முற்றிலும் ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் இந்த டிஜிட்டல் டைரி, தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டைரியின் விசேஷ அம்சம் என்னவென்றால், இதில் நாம் பேனாவால் எழுதும் கேள்விகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப புத்திசாலித்தனமாக நமக்குத் திரும்பப் பதிலளிக்கிறது.
அதுமட்டுமின்றி, நமது அன்றாடக் கடமைகள் மற்றும் வேலைகளையும் துல்லியமாக நமக்கு நினைவூட்டி ஒரு சிறந்த தனிப்பட்ட உதவியாளராகவும் செயல்படுகிறது.
சினிமா கற்பனையை நிஜமாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, தற்போது உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களைப் பெருவியப்பில் ஆழ்த்தி வருகிறது.
