இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் தீவிர ரசிகர் ஒருவர், தன் அபிமான வீரரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஒரே வெறியோடு, ஒடிசாவிலிருந்து பெங்களூரு வரை 12 நாட்களுக்கும் மேலாகத் மிதிவண்டியிலேயே (Cycle) பயணம் செய்து வந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தன் மீது இவ்வளவு அன்பு வைத்து இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு சைக்கிளிலேயே வந்த அந்த ரசிகரைக் கண்ட ஹர்திக் பாண்டியா, அவரைக் கட்டிப்பிடித்துத் தனது அன்பை வெளிப்படுத்தியதோடு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.

​ரசிகரின் இந்த அசாத்தியமான முயற்சியைக் பாராட்டிய ஹர்திக் பாண்டியா, அவருக்கு ரூபாய் 1.5 லட்சத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, அவர் ஊர் திரும்புவதற்கான ஒட்டுமொத்த பயணச் செலவுகளையும் தானே ஏற்றுக்கொண்டதுடன், அந்த ரசிகருக்குப் புத்தம் புதிய விராட் கோலி பிராண்ட் ஷூக்களையும் பரிசாக வழங்கிக் கௌரவித்துள்ளார். மைதானத்திற்குள் ஆக்ரோஷமாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் தான் ஒரு மிகச்சிறந்த பண்பாளர் (Gentleman) என்பதை ஹர்திக் பாண்டியா இந்த செயலின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.