புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாட்டின் காரணமாக உணவகங்கள் மற்றும் டீக்கடைகளை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை ஈடுகட்ட முடியாமல், டீ மற்றும் காபி விலையை அதிரடியாக உயர்த்த கடை உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு சாமானிய மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அமலில் உள்ள விலை பட்டியலின்படி, ஒரு டீ 10 ரூபாய்க்கும், காபி 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், நாளை முதல் இந்த விலையில் பெரும் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, ஒரு டீயின் விலை 20 ரூபாயாகவும், காபியின் விலை 30 ரூபாயாகவும் இரு மடங்கு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டு தினமான நாளை முதல் இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு வருவதால், காலை நேரங்களில் டீக்கடைகளை நாடும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
