டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியாவிற்கு வர வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) மறுப்பு தெரிவித்துள்ள விவகாரம் சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளார். முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎல் தொடரிலிருந்து பிசிசிஐ தலையீட்டால் கேகேஆர் அணி நீக்கியதே இந்த மோதலுக்கு விதை போட்ட நிலையில், வங்கதேசத்தின் நிலைப்பாடு நியாயமானது என்றும், ஐசிசி (ICC) ஒருதலைப்பட்சமாக செயல்படாமல் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்றும் அப்ரிடி விளாசியுள்ளார்.
“ஐசிசி என்பது இந்திய கிரிக்கெட் கவுன்சில் அல்ல” என மறைமுகமாக பிசிசிஐ-ஐ சாடிய அவர், வங்கதேச போட்டிகளை வேறு நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார். மேலும், ஐசிசி தலைவர் ஜெய் ஷா கிரிக்கெட்டை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முயன்றாலும், தற்போதைய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தெளிவான முடிவை எடுக்க வேண்டியது அவசியம் என அப்ரிடி அழுத்தமாக கூறியுள்ளார்.
