இன்றைய இளைஞர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற மோகம் தலைக்கேறி வருகிறது. அந்தப் பித்தினால், பலரும் ஆபத்தான ஸ்டண்ட்களைச் செய்து தங்கள் உயிரோடு விளையாடுகின்றனர். சமீபத்தில் எக்ஸ் (X) தளத்தில் வெளியான வீடியோவில், இளைஞர் ஒருவர் ஹெல்மெட் கூட அணியாமல், ஓடும் பைக்கின் மீது நின்றுகொண்டு சாகசம் செய்ய முயல்கிறார். எதிர்பாராத விதமாகப் பிடி நழுவி, அவர் நிலைதடுமாறி சாலையில் பயங்கரமாகத் தூக்கி வீசப்படுகிறார். அந்த இளைஞரின் பைக் நெடுந்தூரம் சறுக்கிக்கொண்டு ஓடுகிறது. மயிரிழையில் உயிர் பிழைத்த அந்த இளைஞரின் இந்த “ஹீரோகிாி” வீடியோ பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கிறது.

​இந்த வீடியோவை இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். “சாலையில் செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு கிடையாது; ஒரு ஸ்டண்ட் உங்களை நேராக மருத்துவமனைக்கோ அல்லது மயானத்திற்கோ கொண்டு சேர்த்துவிடும்” என்று நெட்டிசன்கள் பலரும் காட்டமாகப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு லைக் அல்லது ரீல்ஸுக்காக வாழ்க்கையைப் பணயம் வைப்பது புத்திசாலித்தனம் இல்லை என்றும், சாலை விதிகளை மதித்து நடப்பதே உண்மையான கெத்து என்றும் பலரும் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.