சீனாவில் வேலை தொடர்பாக மேலாளர் விதித்த தண்டனை காரணமாக பெண் ஊழியர் ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாங் என்ற பெண் ஊழியரிடம், பணியை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கவில்லை எனக் கூறி 200 முறை உட்கார்ந்து எழும் உடற்பயிற்சியை செய்யுமாறு மேலாளர் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. வேலையை முடிக்க முடியாததற்காக இதுபோன்ற கடுமையான தண்டனை வழங்கப்பட்டதாக வெளியான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் பணியிடங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அழுத்தம் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மேலாளர் கூறியதை தொடர்ந்து யாங் 200 முறை உட்கார்ந்து எழும் பயிற்சியை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு ‘ராப்டோமையோலிசிஸ்’ எனப்படும் அரிய வகை உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென அதிகப்படியான உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட காரணங்களால் தசைகளில் கடுமையான பாதிப்பு ஏற்படும் நிலையாக இது மருத்துவ ரீதியாகக் குறிப்பிடப்படுகிறது.

நோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து யாங் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தசைகளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சிறுநீரகங்கள் உள்ளிட்ட உடலின் முக்கிய உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிப்பதாக கூறப்படுகிறது. இதனால், சாதாரணமாகத் தோன்றும் உடற்பயிற்சியைக் கூட ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக மேற்கொள்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற விவாதமும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பணியிடங்களில் தண்டனை என்ற பெயரில் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் உடல் ரீதியான அழுத்தம் குறித்தும் கவனத்தை ஈர்த்துள்ளது.

வேலையை முடிக்கவில்லை என்பதற்காக ஊழியரை 200 முறை உடற்பயிற்சி செய்ய வைத்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பணிச்சுமை மற்றும் இலக்குகளை நிர்ணயிக்கும் போது ஊழியர்களின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதேபோல், பணியிடத்தில் ஏற்படும் அழுத்தம் ஊழியர்களின் உடல்நிலையை பாதிக்காத வகையில் நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. யாங் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.