வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்பது பலரது கனவாக இருந்தாலும், அங்குள்ள வேலை கலாச்சாரம் எப்படியிருக்கும் என்ற தயக்கம் பலருக்கும் உண்டு.
இந்நிலையில், நெதர்லாந்தில் பணியாற்றி வரும் அதிதி என்ற இந்தியப் பெண், அங்குள்ள ‘ஒர்க்-லைஃப் பேலன்ஸ்’ (Work-Life Balance) குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அலுவலக நேரத்தில் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறார்கள் என்றும், ஆனால் வேலை நேரம் முடிந்த அடுத்த நொடியே தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மாலை நேரங்களில் அலுவலக மின்னஞ்சல்களோ அல்லது வேலை தொடர்பான அழுத்தங்களோ தங்களது சொந்த நேரத்தை ஆக்கிரமிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை என அதிதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவைப் போன்ற நாடுகளில் கூடுதல் நேரம் வேலை செய்வது பெருமையாகக் கருதப்படும் நிலையில், நெதர்லாந்தின் இந்த ஆரோக்கியமான கலாச்சாரம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “நமக்கும் இப்படி ஒரு வேலை வாய்ப்பு கிடைக்காதா?” என ஏக்கத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
