
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பநாயக்கன் பகுதியில் பிரபு (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு லாவண்யா (33) என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். இதில் பிரபு உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் சடலமாக கிடந்தார். அவருடைய கழுத்தில் ரத்த காயங்கள் இருந்தது. இது தொடர்பாக பிரபுவின் தாயார் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாவண்யாவிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
அதாவது லாவண்யா அதே பகுதியில் டிபன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது அங்கு சாப்பிடுவதற்காக வட மாநில தொழிலாளி ஒருவர் அடிக்கடி வந்துள்ளார். அவருடைய பெயர் பைரகவுடா (39). இவருக்கும் லாவண்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அதன்பின் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்த நிலையில் இந்த விவகாரம் பிரபுவுக்கு தெரிய வந்தது. இதனால் அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தன்னுடைய கணவரை தீர்த்து கட்ட லாவண்யா முடிவு செய்தார்.
அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரப மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நலமுடன் வீட்டிற்கு திரும்பினார். இருப்பினும் தன்னுடைய கள்ள காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்து கட்டுவதில் அவர் உறுதியாக இருந்தார். இதைத்தொடர்ந்து தன்னுடைய கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து பிரபுவின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அதன் பின் கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் தன்னுடைய கணவர் இறந்துவிட்டதாக அவர் நாடகமாடியுள்ளார். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் தெரிய வந்த நிலையில் லாவண்யா மற்றும் அவருடைய கள்ளக்காதலனை அதிரடியாக கைது செய்துள்ளனர்.