அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தியை நெருங்கும் ஈரானிய கப்பல்களைக் கண்டதும் சுட்டு வீழ்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே போர்ச் சூழல் நிலவி வந்த நிலையில், பாகிஸ்தானில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிவேகப் படகுகள் மற்றும் கப்பல்கள் அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால், அவற்றைத் தற்காப்புக்காகத் தாக்கி அழிக்க அமெரிக்க ராணுவம் முழுத் தயார் நிலையில் உள்ளதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதனால் ஈரானின் முக்கியக் கடற்படைப் பிரிவுகள் ஏற்கனவே கணிசமாகப் பலவீனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள சிறிய ரக அதிவேகக் கப்பல்களை அழிப்பதற்குக் கடலில் போதைப்பொருள் கடத்தல் படகுகளைக் கையாளும் கடுமையான முறையைப் பின்பற்றப் போவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புதிய உத்தரவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் இத்தகைய போர் பதற்றம் அதிகரிப்பது, சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். டிரம்ப்பின் இந்த அதிரடி முடிவால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் சிக்கலாகியுள்ளது.
