சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஆதரவாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்..

சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழையால் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. அனைத்து இடங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனிடையே தமிழக அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்கள் படிப்படியாக மீண்டு வருகிறது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் சென்னை மக்களுக்கு ஆதரவாக நின்றார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “சென்னையின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது. இந்த இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. தயவு செய்து அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம், தேவைப்பட்டால் உயரமான நிலத்தைத் தேடுங்கள்.. உதவி செய்யும் நிலையில் உள்ளவர்கள் தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும். நம்மால் முடிந்தவரை ஆதரவளிக்க ஒன்றுபடுவோம். ”என்று தனது ரசிகர்களுக்கு பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவிற்கு பதிலளித்த கிரிக்கெட் வீரரின் ரசிகர்கள் பலர், சென்னை மக்களுடன் ஒற்றுமையாக நின்றதற்கு நன்றி தெரிவித்தனர். ஒருவர் ”எங்களுக்கு எதிராக நீங்கள் கோப்பையை வென்றாலும் இந்திய ரசிகர்கள் உங்களை நேசிக்க இதுவே காரணம். நீங்கள் ஒரு உண்மையான மனிதர், அண்ணா” என பதிவிட்டார்.

மற்றொருவர், ”மிக்க நன்றி, இது எங்களுக்கு நிறைய அர்த்தம்” என்று கருத்து தெரிவித்தார். மூன்றாவதாக, ”இந்த மனிதருக்கு இந்தியக் குடியுரிமை கொடுங்கள்” என்று ஒருவர் கூறினார். கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வார்னரை பாராட்டி வருகின்றனர்.