இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதில் தனது பங்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

டி20 கேப்டன் பதவியில் இருந்து நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி நீக்கப்பட்டு, ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2021 டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றில் வெளியேறிய பிறகு கோலி இந்தியாவின் டி20ஐ கேப்டன் பதவியில் இருந்து விலகினார். டெஸ்ட் கேப்டன் பதவியையும் கோலி கைவிட முடிவு செய்வதற்கு முன்பு அவர் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்த போது நடந்தது.

கோலியின் கேப்டன்ஷிப்பை தூக்கி எறிந்தவர் கங்குலி என்றும், இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த விவகாரங்களில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கங்லி தற்போது தெளிவுபடுத்தியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியது குறித்து கங்குலி இப்போது மனம் திறந்து, அவரின் முடிவுக்கு தான் பின்னால் இல்லை என்று கூறியுள்ளார்.

தாதாகிரி அன்லிமிடெட் சீசன் 10 இல் சவுரவ் கங்குலி கூறுகையில், “நான் விராட்டை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை. டி20 போட்டிகளில் தலைமை வகிக்க அவர் ஆர்வம் காட்டவில்லை. எனவே, அவர் அந்த முடிவை எடுத்த பிறகு, நான் அவரிடம் சொன்னேன், நீங்கள் டி20 போட்டிகளில் தலைமை தாங்க விரும்பவில்லை என்றால், முழு ஒயிட்-பால் (2 வெள்ளை பந்து வடிவம் டி20, ஒருநாள் ) கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவது நல்லது என்பதை நான் அவருக்கு தெளிவுபடுத்தினேன். ஒரு வெள்ளை பந்து கேப்டனும் சிவப்பு பந்து கேப்டனும் இருக்கட்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது.

“ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பை ஏற்க நான் கொஞ்சம் தள்ளிவிட்டேன், ஏனெனில் அவர் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் தலைமை தாங்க விரும்பவில்லை. அதனால், அதில் எனது பங்களிப்பு கொஞ்சம் இருக்கலாம் ஆனால் யார் நிர்வாகம் செய்தாலும், களத்தில் சிறப்பாக செயல்படுவது வீரர்கள்தான். இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக நான் பிசிசிஐயின் தலைவராக நியமிக்கப்பட்டேன், இது ஒரு சிறிய பகுதி, ”என்று கூறினார்.

கோலி – கங்குலி சர்ச்சை எப்படி?

டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலி ராஜினாமா செய்தபோது, ​​அவரை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ திடீரென முடிவு செய்தது. இந்நிலையில், இதுபற்றி தன்னிடம் எதையும் சொல்லவில்லை என்று கோலி வெளிப்படையாக கூறியதால் இந்த விவகாரம் சர்ச்சையானது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான அணி தேர்வுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு தான் இது குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் கோலி வெளிப்படுத்தியதால் பிரச்சினை வெடிக்கும் திருப்பத்தை எடுத்தது.

டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று கங்குலி கேட்டுக் கொண்டதாக கோலி மறுத்துள்ளார். அப்படி யாரும் தன்னிடம் கோரிக்கை வைக்கவில்லை என்று கோலி கூறியுள்ளார். உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக உறுதியான முடிவை எடுத்திருப்பதாகவும் கோலி கூறினார்.

வெள்ளை பந்து வடிவத்தில் 2 கேப்டன்களின் நிலைமையைத் தவிர்க்க, ரோஹித் சர்மா மட்டுமே வெள்ளை பந்து கேப்டனாக இருப்பார் என்றும், கோலி டெஸ்ட் கேப்டனாகத் தக்கவைக்கப்படுவார் என்றும் கங்குலி கூறினார். சர்ச்சைக்குப் பிறகு பிசிசிஐ இந்த ஃபார்முலாவை அமல்படுத்தியது. இந்நிலையில், அணியின் ஒற்றுமைக்கு ஒயிட் பந்தில் ஒரு கேப்டன் என்ற கொள்கை முக்கியமானது என்ற நிலைப்பாட்டை பிசிசிஐ எடுத்தது