பெங்களூரு அருகே ஒரு தனியார் ஐபோன் தயாரிப்பு நிறுவனத்தில், கழிவறை குப்பைத் தொட்டியில் பச்சிளம் சிசு ஒன்று கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ரேணுகா என்ற இளம்பெண், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நிலையில், வேலை செய்யும் இடத்திலேயே அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது
இதனால் கழிவறைக்குச் சென்ற அவர், அங்குப் பிறந்த குழந்தையைத் யாருக்கும் தெரியாமல் மறைக்க எண்ணி, அதன் கழுத்தை நெரித்துக் கொன்று குப்பையில் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கழிவறையைச் சுத்தம் செய்தபோது ரத்தக் கறைகளுடன் சிசுவின் உடல் கிடப்பதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ரேணுகா சிக்கினார். பிரசவத்திற்குப் பின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ரேணுகா மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரது கர்ப்பத்திற்குக் காரணமான நபர் யார் என்பது குறித்தும், இந்தத் துயரமான சம்பவத்தின் பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தத் தொழிற்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
