மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரத்தில் இளம்பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தில், அந்தப் பெண் தற்கொலை முயற்சியாகத் தன் மீது தானே ஆசிட் ஊற்றிக் கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அஹில்யாநகர் மாவட்டம் சங்கமநேரில் 13 வயது சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே, கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி மாலை, பண்டரிபுரத்தைச் சேர்ந்த வைஷ்ணவி பாகவத் (28) என்ற இளம்பெண் ஆசிட் வீச்சால் காயமடைந்ததாகக் கூறி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மகாராஷ்டிராவில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் சூழலில், இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் டகலே தலைமையிலான தனிப்படையினர் விசாரணையைத் தொடங்கினர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரும் நடமாடவில்லை என்பது தெரியவந்தது. மேலும், அந்த இளம்பெண் அளித்த வாக்குமூலத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இருந்தன. இதையடுத்து, போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அந்தப் பெண் தனது தாயார் முன்னிலையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் அந்தப் பெண் வாக்குமூலம் அளித்ததாவது, நான் கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் மற்றும் இதர உடல்நலப் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தேன். பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தி மற்றும் குடும்பத்தாரின் வசவுச் சொற்களைத் தாங்க முடியாமல், வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தீர்மானித்தேன். கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் 60 ரூபாய் மதிப்பிலான ஆசிட்டை ஒரு கடையிலிருந்து வாங்கினேன். சிசிடிவி கேமராக்கள் இல்லாத ஆள் நடமாட்டமற்ற இடத்திற்குச் சென்று, எனது முகத்தின் வலது பக்கத்தில் ஆசிட்டை ஊற்றிக் கொண்டேன் என்றார்.

தற்போது அந்த இளம்பெண் அபாயக் கட்டத்தைத் தாண்டி சீராக உள்ளார். அவரது கண்களில் பட்ட ஆசிட் துளிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அதிகாரி பிரசாந்த் டகலே, “இளம்பெண் ஆசிட் வாங்கிய கடையைக் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார். மேலும் உடல்நலக் குறைவால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, ஒரு இளம்பெண் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதோடு, அதை ஆசிட் வீச்சு நாடகமாக மாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.