இந்தியாவின் பெருநகரங்களில் நிலவும் மோசமான அடிப்படை வசதிகள், போக்குவரத்து நெரிசல் மற்றும் குறைந்து வரும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றால் விரக்தியடைந்த நபர் ஒருவர், தன்னிடம் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருந்தும் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அதாவது பணியிடங்கள் குறித்த தகவல்களைப் பகிரும் ‘பிளைண்ட்’ (Blind) என்ற தளத்தில், “10 கோடி சேமித்துவிட்டேன், இந்தியாவெனும் இந்தச் சர்க்கஸ் எனக்குப் போதும்” என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ளார். 50 வயதைக் கடந்த அந்த நபர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

பெங்களூரு அல்லது தில்லி போன்ற நகரங்களில் வாழ்வது தினசரி ஒரு போர்க்களத்தில் இருப்பது போல உள்ளது. 10 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பது ஒரு வெற்றியாகத் தோன்றலாம். ஆனால், நீண்ட வரிசைகள், குழப்பமான சாலைகள் மற்றும் ‘பூஜ்ஜிய சேவை’ கொண்ட அதிகப்படியான வரிகள் ஆகியவை மிகுந்த சோர்வைத் தருகின்றன.

அதிக சத்தம், அசுத்தமான வடிகால்கள் மற்றும் தனிமனித இடைவெளி இல்லாமை ஆகியவற்றை அவர் முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “எல்லா இடங்களிலும் வெற்றிலை (பாக்கு) கறைகள், மால்களில் அதிக விலையுள்ள சர்வதேச பிராண்டுகள் – இவை எனக்குத் தேவையில்லை. நிம்மதியான ஓய்வுக்காலத்தை எதிர்நோக்கி இந்த நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டேன்” என்று அவர் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு இணையவாசிகள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் கேரளாவில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இல்லை என்பதால் செலவுகள் குறைவு. சுத்தமான காற்று, அமைதி மற்றும் பெரிய வீடுகள் அங்கு கிடைக்கும். ஓய்வுக்காலத்திற்கு அதுவே சிறந்த இடம்,” என ஒரு பயனர் பரிந்துரைத்துள்ளார். மாச்சலப் பிரதேசம் அல்லது உத்தரகண்ட் போன்ற இடங்களுக்குச் சென்றால் மாசு இல்லாத காற்றும் அமைதியும் கிடைக்கும் என மற்றொருவர் கூறியுள்ளார். சிக்கிம் போன்ற மாநிலங்களில் வருமான வரிச் சலுகைகள் மற்றும் சிறந்த நாகரிகப் பண்புகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி அங்கு குடியேறச் சிலர் யோசனை தெரிவித்துள்ளனர்.

நீங்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்றால், உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என ஒரு பயனர் விமர்சித்துள்ளார். மேலும் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வரி செலுத்துவோருக்கான சேவைகள் குறித்து இந்த பதிவு மீண்டும் ஒரு விவாதத்தை முன்னெடுத்துள்ளது.