பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டைச் சேர்ந்த பல்ஜீத் சிங் என்பவர், பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். என்.எச்-44 தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையின் அருகே இணையத்துடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராவை நிறுவி, அதன் மூலம் இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் நடமாட்டத்தை அவர் கண்காணித்து வந்துள்ளார்.
இந்தத் தகவல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தனது தொடர்பாளர்களுக்கு அவர் நேரலையாக அனுப்பி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், துபாயைச் சேர்ந்த நபர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இதற்காக அவருக்கு 40,000 ரூபாய் வழங்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரிடமிருந்து சிசிடிவி கேமரா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதமும் இதேபோல் அதிநவீன கேமராக்களைப் பயன்படுத்தி ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ (ISI) ஆதரவு பெற்ற குழுக்களை பஞ்சாப் காவல்துறையினர் முறியடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
