ஈரான் மீதான ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ தாக்குதலின் முதல் 24 மணி நேரத்திலேயே அமெரிக்கா சுமார் $779 மில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 6,500 கோடி ரூபாய்க்கும் அதிகம்.
இந்தத் தாக்குதலில் பி-2 ஸ்டெல்த் பாம்பர் விமானங்கள், எஃப்-35 போர் விமானங்கள் மற்றும் சுமார் 200 டோமாஹாக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. ஏவுகணைகளுக்காக மட்டும் சுமார் $340 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இது தவிர, போர் ஆயத்தப் பணிகளுக்காகச் செய்யப்பட்ட $630 மில்லியன் டாலர் செலவையும் சேர்த்தால், ஆரம்பக்கட்டத்திலேயே அமெரிக்காவின் நிதிச் சுமை மலைக்க வைக்கிறது.
இந்தத் தாக்குதலால் உலகப் பொருளாதாரத்திலும் பெரும் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8% வரை உயர்ந்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் சர்வதேச சந்தையில் விலைவாசி உயரும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் போருக்கான நேரடிச் செலவுகள் ஒருபுறமிருக்க, வர்த்தகத் தடை மற்றும் எரிசக்தி தட்டுப்பாடு காரணமாக உலக நாடுகளுக்குப் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை, நீண்ட காலப் போர் ஏற்பட்டால் அதன் பட்ஜெட்டில் பெரும் பகுதியை ராணுவத்திற்கே ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
