இந்திய – பாகிஸ்தான் எல்லை என்பது உலகிலேயே மிகவும் பாதுகாக்கப்பட்ட மற்றும் பதற்றமான பகுதிகளில் ஒன்று. ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர், மிக எளிதாக இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து நெட்டிசன்கள் தற்போது ஆதாரங்களை அடுக்கி வருகின்றனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் என தன்னை அழைத்துக்கொள்ளும் சனா காதிர், கசூர் அருகே உள்ள கண்டா சிங் எல்லைப் பகுதியில் ஒரு வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், வெறும் சில மூங்கில் குச்சிகளும், ஒரு கயிறும்தான் இந்திய-பாகிஸ்தான் எல்லை என்று அவர் கூறுகிறார்.
மேலும், அருகில் ஒரு கட்டுமானப் பணி நடக்கும் இடத்தைக் காட்டி, அது இந்தியா என்றும், பாகிஸ்தான் மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது, இந்தியா இன்னும் கட்டுமானப் பணியில்தான் இருக்கிறது என்றும் கிண்டலாகக் கூறுகிறார். பிறகு, அந்தக் கயிற்றைத் தாண்டி தான் இந்தியாவுக்குள் கால் வைத்துவிட்டதாகக் கூறி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்திய மற்றும் உலகளாவிய நெட்டிசன்கள் அந்தப் பெண்ணின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளனர்.
View this post on Instagram
அந்த வீடியோவில் சனா காதிருக்கு பின்னால் வெகு தொலைவில் உண்மையான எல்லை வாயில் தெரிவதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவர் நின்றிருந்த இடம் உண்மையான சர்வதேச எல்லையில் இருந்து பல மீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தான் பகுதி என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் காட்டிய கட்டுமானப் பணியும் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே நடப்பது என்றும், வெறும் வியூஸ்களுக்காக (Views) அவர் இவ்வாறு தரம் தாழ்ந்த பொய்களைப் பரப்புகிறார் என்றும் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (BSF) கண்காணிப்பைத் தாண்டி யாராலும் அவ்வளவு எளிதாக உள்ளே நுழைய முடியாது என்பதை அந்தப் பெண் உணர வேண்டும் என நெட்டிசன்கள் அவருக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
