தைவானின் தலைநகர் தைபேயில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற வன்முறைத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயமடைந்தனர். கத்தி மற்றும் புகை குண்டுகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதல், நகரின் நெரிசலான பகுதிகளில் பெரும் பீதியை ஏற்படுத்தியதாக அரசு நடத்தும் மத்திய செய்தி நிறுவனம் (CNA) தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பின்னர், சந்தேக நபர் தைபேயில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்த சந்தேக நபர் 27 வயதான சாங் வென் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உள்ளூர் ஊடகத் தகவல்களின்படி, வெள்ளிக்கிழமை மாலை தைபேயின் பிரதான சுரங்கப்பாதை நிலையத்தின் நிலத்தடி வெளியேறும் பகுதி அருகே சந்தேக நபர் புகை குண்டை வீசியதன் மூலம் சம்பவம் தொடங்கியது. இந்த இடம் தைபேயின் முக்கிய ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பரபரப்பான போக்குவரத்து மையமாகும். திடீரென ஏற்பட்ட புகை காரணமாக பயணிகள் மற்றும் பாதசாரிகள் பீதியடைந்து அங்கிருந்து வெளியேறினர்.
BREAKING: 3 killed, 5 injured as knife attacker goes on rampage in central Taipei, Taiwan after setting off smoke bombs at main train station — Reuters pic.twitter.com/04zgmAZs8T
— Rapid Report (@RapidReport2025) December 19, 2025
அதனைத் தொடர்ந்து, சந்தேக நபர் அருகிலுள்ள பிரபல ஷாப்பிங் பகுதிக்கு சென்று, எஸ்லைட் எனப்படும் பிரசித்திபெற்ற பல்பொருள் அங்காடியில் கத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்தக் கடையின் முதல் மற்றும் நான்காவது தளங்களில் நடந்த தாக்குதலில் பலரை குறிவைத்து குத்தியதாகவும், பெரும்பாலானவர்களுக்கு கழுத்துப் பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பாதசாரி என்றும், தாக்குதலுக்குப் பிறகு மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாரடைப்பால் உயிரிழந்ததாக தைவான் பிரதமர் சோ ஜங்-தாய் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும் ஒருவருக்கு புகை குண்டு புகையை சுவாசித்ததால் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததையும், ஆறு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். தாக்குதல் நடந்த பகுதிகளை பாதுகாப்புப் படையினர் உடனடியாக சுற்றிவளைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தைபேயின் முக்கிய பொது இடங்களில் காவல் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, சந்தேக நபர் சாங் வென் குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பரில் கட்டாய ரிசர்வ் இராணுவப் பயிற்சிக்கு ஆஜராகத் தவறியதற்காக அவர் அதிகாரிகளால் தேடப்பட்டு வந்ததாக CNA தெரிவித்துள்ளது. இந்த பின்னணி மற்றும் தற்போதைய தாக்குதலுக்கு இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நெரிசலான நகர்ப்புற பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது. நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், தாக்குதலுக்கான முழு காரணங்கள் மற்றும் சந்தேக நபரின் மரணத்திற்கு வழிவகுத்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
