உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில், தனது தாய் மற்றும் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவர்களின் உடல் உறுப்புகளைத் தின்ற நபரின் செயலால் அந்த கிராமமே பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளது.
குஷிநகர் மாவட்டம், அகிரௌலி காவல் எல்லைக்குட்பட்ட பர்சா கிராமத்தைச் சேர்ந்தவர் சிக்கந்தர் குப்தா (30). மும்பையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த இவர், ஒரு மாதத்திற்கு முன்புதான் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். போதைப் பழக்கத்திற்கு அடிமையான சிக்கந்தர், அடிக்கடி தனது தாய் ரூனா தேவி (60) மற்றும் மனைவி பிரியங்கா (28) ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் மொட்டை மாடியில் வைத்து தனது தாய் மற்றும் மனைவியை சிக்கந்தர் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர், சிமெண்ட் செங்கற்களைக் கொண்டு இருவரின் தலையையும் சிதைத்துக் கொலை செய்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தபோது, அங்கு தெரிந்த காட்சி அவர்களை உறைய வைத்தது. உயிரிழந்தவர்களின் தலையிலிருந்து மூளையை எடுத்து சிக்கந்தர் தின்று கொண்டிருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தடுக்க முயன்ற கிராம மக்கள் மீது, மனித மாமிசத் துண்டுகளை வீசி எறிந்து சிக்கந்தர் மிரட்டியுள்ளார். இதனால் கிராம மக்கள் அலறியடித்து ஓடினர்.
தகவலறிந்து வந்த போலீஸார், கொலையாளியை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இது குறித்துப் பேசிய எஸ்பி கேசவ் மிஸ்ரா, “இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மனநிலை குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்” என்றார்.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் நிபுணர் அசோக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “இது போன்ற நரமாமிசம் உண்ணும் பழக்கம் (Cannibalism) ஒரு தீவிரமான மனநோயின் அறிகுறியாகும். பாதிக்கப்பட்டவர் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெற வேண்டும் என்ற வக்கிரமான ஆசை அல்லது ஆளுமைத் திறன் குறைபாட்டால் இத்தகைய செயல்கள் அரங்கேறுகின்றன. பாதிக்கப்பட்டவர் தன்னை விட்டு எப்போதும் பிரிந்து செல்லக்கூடாது என்ற விசித்திரமான எண்ணமே இதற்கு அடிப்படை காரணம்” என்றார். மேலும் போதை மற்றும் தீவிர மனநோயின் பாதிப்பால் இந்த விபரீதம் நடந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
