மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதில் முக்கியப் பங்காற்றிய வீரர் ரிச்சா கோஷின் (Richa Ghosh) கிரிக்கெட் பயணம் பலருக்கும் உத்வேகமளிப்பதாக உள்ளது.

ரிச்சாவுக்கு நான்கு வயது இருக்கும்போதே அவர் தனது தந்தையுடன் சிலிகுரி கல்லூரி மைதானத்திற்கு வந்ததை அவரது பால்யகால பயிற்சியாளர் கோபால் சஹா இன்றும் நினைவுகூறுகிறார். “அவளது வீடு மைதானத்திலிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. மற்ற பெண்கள் போல் அல்லாமல், அவள் சிறு வயதிலிருந்தே பேட், பந்துடன் மட்டுமே விளையாடுவாள்.

கையுறைகளைப் போட்டுக்கொண்டு, களத்தில் குதித்து, மற்றவர்களை விட அதிக நேரம் களத்தில் இருப்பாள்; கடின உழைப்பை விரும்பினாள்” என்று பாகாஜதின் தடகளக் கழகத்தில் பயிற்சி அளிக்கும் 50 வயதான சஹா, தனது மாணவியின் ஆரம்ப காலத்தைக் குறித்து பெருமையுடன் கூறுகிறார். ஆரம்பத்தில் மிகவும் வெட்க கூச்ச சுபாவத்துடன் இருந்த ரிச்சா, தான் பயிற்சிக்குச் சேர்ந்தபோது சிறுவர்களுடன் மட்டுமே பயிற்சி எடுத்த ஒரே பெண் என்று சஹா நினைவுகூறுகிறார்.

ரிச்சா கோஷ் முதலில் பந்துவீச்சாளராகவே விளையாடத் தொடங்கினார், ஆனால் அவரது பயிற்சியாளர் கோபால் சஹா அவரிடம் ஒரு வித்தியாசமான திறமையைக் கண்டார். “நான் அவளை விக்கெட் கீப்பிங் செய்ய வைத்தேன், அவள் இயற்கையாகவே அதை ஏற்றுக்கொண்டாள்,” என்று அவர் கூறுகிறார்.

அங்கிருந்து அவரது வளர்ச்சி அதிவேகமாக இருந்தது: அண்டர் 12, 13, 15, 17 பிரிவுகளில் இருந்து வெகு விரைவிலேயே வங்காள மாநில அணிக்கும் தேர்வானார். 12 வயதிலேயே மாவட்டப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து மாநில அணியில் இடம்பிடித்தார்.

ஹைதராபாத்தில் நடந்த ஒரு போட்டியில் அவர் அடித்த 48 ரன்கள், அப்போதைய இந்தியப் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமனின் கவனத்தை ஈர்த்ததால் அவர் டி20 அணியில் சேர்க்கப்பட்டார். அவரது மன உறுதியையும், அதிரடியாகப் பந்து வீசும் திறமையையும் நம்பி ஜூலன் கோஸ்வாமியும் ஆதரவளித்ததாகச் சஹா நினைவு கூர்ந்தார்.

“அவள் சிறுவயதில் எப்போதும் அதிரடியாக மட்டுமே ஆட நினைத்தாள், ஆனால் பின்னர் காலப்போக்கில் எப்போது நிதானமாக விளையாட  வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டாள்; அந்த சமநிலை அவளைச் சிறப்பானவளாக மாற்றியது,” என்று சஹா கூறுகிறார். இன்று உலகக் கோப்பையை வென்ற பிறகும், ரிச்சா விடுமுறையில் இருக்கும்போது அதே பழைய மைதானத்திற்குப் பயிற்சிக்கு வருகிறார்.

“அவளைப் பார்த்து பல இளம் பெண்களும் இப்போது எங்கள் கிளப்பில் சேர்ந்துள்ளனர். முன்னர் அவள் மட்டுமே இருந்தாள்; இன்று மைதானம் ரிச்சாவைப் போல் ஆக முடியும் என்று நம்பும் இளம் பெண்களால் நிரம்பி வழிகிறது” என்று அவர் பெருமிதம் கொள்கிறார். “அவளது இந்தப் பயணம் இன்னும் முடியவில்லை; இது ஆரம்பம்தான். ஆட்டத்தின் மீது தொடர்ந்து கவனம் செலுத்துமாறு அவளுக்குச் சொல்வேன்” என்று சஹா நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.