ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து, அவர்களின் பெயரிலேயே போலியான பார்சல்களை அனுப்பி பணம் பறிக்கும் புதிய வகை மோசடி சமூக வலைதளங்களில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமீபத்தில் ‘ரெடிட்’ (Reddit) சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஒருநாள் அவரது வீட்டு வாசலில் ‘அமேசான்’ நிறுவனச் சீருடை அணிந்த டெலிவரி ஊழியர் ஒருவர் பார்சலுடன் நின்றுள்ளார். அந்தப் பார்சலில் பயனரின் சரியான பெயர் மற்றும் முகவரி அச்சிடப்பட்டிருந்தது.
அந்த ஊழியர் ரூ. 699 கட்டணம் (Cash on Delivery) கேட்டார். தனது குடும்பத்தினர் யாராவது ஆர்டர் செய்திருக்கலாம் என நினைத்து, அந்த நபர் யோசிக்காமல் பணத்தைச் செலுத்தி பார்சலைப் பெற்றுக்கொண்டார்.
பார்சலைத் திறந்து பார்த்தபோது, உள்ளே இருந்த பொருள் மிகவும் தரம் குறைந்ததாகவும், அதன் சந்தை மதிப்பு வெறும் 20 அல்லது 30 ரூபாய்க்கு மேல் இருக்காது என்பதும் தெரியவந்தது. உடனடியாக அமேசான் செயலியில் தனது ‘ஆர்டர் ஹிஸ்டரி’யைச் சரிபார்த்தபோது, அப்படி ஒரு ஆர்டரே செய்யப்படவில்லை என்பது உறுதியானது. அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.
மோசடி செய்பவர்கள் மக்களின் பெயர் மற்றும் முகவரித் தகவல்களை ஆன்லைன் தரவுத்தளங்களில் இருந்து திருடுகின்றனர். பின்னர், நம்பகமான டெலிவரி நிறுவனங்களின் பெயரையும், சீருடையையும் பயன்படுத்தி: குறைந்த மதிப்புள்ள பொருட்களை விலையுயர்ந்த பொருட்கள் போல பேக் செய்கின்றனர்.
The Fake Amazon Parcel Scam – It Got Me
byu/BitterAsk4201 inKerala
‘கேஷ் ஆன் டெலிவரி’ (COD) முறையில் அனுப்பி, வாடிக்கையாளர்களிடம் இருந்து நூதனமாகப் பணம் பறிக்கின்றனர். பார்சலில் சரியான முகவரி இருப்பதால், பெரும்பாலான மக்கள் சந்தேகப்படாமல் பணத்தைக் கொடுத்து விடுகின்றனர்.
இதுபோன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுமாறு வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்:
நீங்கள் ஆர்டர் செய்யாத ஒரு பார்சல் வந்தால், உடனடியாக உங்கள் போனில் உள்ள ஷாப்பிங் செயலியைத் திறந்து ‘ஆர்டர்’ விவரங்களைச் சரிபார்க்கவும்.
கவீட்டில் உள்ள மற்றவர்கள் யாராவது ஆர்டர் செய்துள்ளார்களா என்பதை உறுதி செய்த பின்பே பணத்தை வழங்கவும். டெலிவரி ஊழியரின் அடையாள அட்டையைச் சோதிக்கத் தயங்க வேண்டாம். சந்தேகம் இருந்தால், அந்தப் பார்சலை வாங்க மறுத்து (Refuse delivery) திருப்பி அனுப்பவும்.
சிறு எச்சரிக்கை மட்டுமே உங்களை இதுபோன்ற பண இழப்புகளில் இருந்து காப்பாற்றும்.
