டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிக்கும் கும்பல் என ஒரு பெண்கள் குழுவை இளைஞர் ஒருவர் பகிரங்கமாகச் சாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரஜ் பாட்டி என்ற இன்ஸ்டாகிராம் பயனர், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் ஒரு பெண்கள் குழுவைத் தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளார். அந்தப் பெண்கள், ரயில் நிலையங்களில் பயணிகள் ஏறும்போதும் இறங்கும்போதும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மொபைல் போன்கள் மற்றும் பணப்பைகளைத் திருடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மெட்ரோ கதவு அருகே நின்றிருந்த அந்தப் பெண்களை நோக்கி கேமராவைக் காட்டிய அவர், “இவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள், உங்கள் உடைமைகளைத் திருடிவிடுவார்கள்” என மற்ற பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள், “யார் போனைத் திருடுவதைப் பார்த்தீர்கள்? ஆதாரமில்லாமல் பேசாதீர்கள்” என அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், “அடுத்த நிலையத்தில் இறங்கினால் உன்னைச் செருப்பால் அடிப்போம்” என அந்தப் பெண்கள் மிரட்டல் விடுத்தனர். அதற்குப் பதிலடியாக, “என்னிடம் பெல்ட் இருக்கிறது, நானும் சும்மா இருக்க மாட்டேன்” என அந்த இளைஞர் ஆக்ரோஷமாகப் பேசியது பயணிகளிடையே சங்கடத்தை ஏற்படுத்தியது. இறுதியில், ஒரு பெண் அந்த இளைஞரின் மொபைல் போனைப் பிடுங்க முயன்றபோது வீடியோ முடிவடைகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதில் சில குழப்பங்களும் நீடிக்கின்றன. வீடியோவை உற்றுப் பார்க்கும்போது, அந்தப் பெண்கள் யாராவது திருடியதற்கான நேரடிச் சான்றுகள் எதுவும் பதிவாகவில்லை. அவர்கள் கூட்டமாக வாசலில் நின்றது மட்டுமே பதிவாகியுள்ளது.
View this post on Instagram
முன்பே இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, மாறாக எனது சமூக வலைதளக் கணக்கையே முடக்கப் பார்த்தார்கள்” என அந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி மெட்ரோ போன்ற நெரிசலான இடங்களில் பிக்பாக்கெட் சம்பவங்கள் நடப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்ட நிலையில், பயணிகள் தங்கள் செல்போன் மற்றும் பணப்பைகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாளுமாறு மெட்ரோ பாதுகாப்புப் படையினர் (CISF) அறிவுறுத்தியுள்ளனர்.
அதேசமயம், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்துப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் மட்டுமே புகார் அளிக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட முறையில் மோதலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்
