
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொத்த கவுண்டன் புதூர் பகுதியில் ஒரு வீடு அமைந்துள்ளது. இங்கு லாரி ஓட்டுனர்களாக வேலை பார்க்கும் 7 பேர் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் அழகுராஜா என்பவரும் உடன் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அழகுராஜா ஓட்டி சென்ற லாரி விபத்தில் சிக்கியுள்ளது. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் இருந்த அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அழகுராஜா பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளித்துக் கொண்டார். அதோடு பெட்ரோல் கேனை வீட்டில் தூக்கி வீசி உள்ளார். இதனால் வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதில் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. அதோடு வீட்டிலிருந்த அனைவரின் மீதும் தீ பற்றியது. இந்த பயங்கர தீ விபத்தில் அழகுராஜா உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அதன்பிறகு 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.