உணவு என்பது பசியைத் தீர்ப்பதற்கான ஒன்றாக மட்டுமல்லாமல், வீட்டின் சுபிட்சத்துடனும் தொடர்புடையதாக வாஸ்து சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது. அதனால் உணவை எந்த இடத்தில் அமர்ந்து சாப்பிடுகிறோம் என்பதற்கும் சில விதிமுறைகள் இருப்பதாக வாஸ்து நம்பிக்கைகள் கூறுகின்றன. வசதிக்காக படுக்கையில் அல்லது வீட்டின் எந்த இடத்திலும் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் இருந்தால், அதைத் தவிர்ப்பது நல்லது எனக் கூறப்படுகிறது.

முதலில், படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது வாஸ்து நம்பிக்கை. குறிப்பாக தொலைக்காட்சி அல்லது கைப்பேசியைப் பார்த்துக்கொண்டே படுக்கையில் உணவு சாப்பிடுவது பலரிடம் காணப்படும் பழக்கமாக உள்ளது. இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன், மன அமைதியையும் பாதிக்கக்கூடும் என்று வாஸ்து சார்ந்த கருத்துகள் தெரிவிக்கின்றன.

அதேபோல், வீட்டின் பிரதான வாசல் அருகிலும், குளியலறைக்கு எதிரிலோ அல்லது அதன் அருகிலோ அமர்ந்து உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொல்கிறது வாஸ்து. பிரதான வாசல் என்பது வீட்டுக்குள் ஆற்றல் மற்றும் மக்கள் வந்து செல்லும் முக்கியப் பகுதியாகக் கருதப்படுவதால், அங்கு அமர்ந்து சாப்பிடுவது சுபிட்சத்துக்கு தடையாக இருக்கலாம் என்பது நம்பிக்கை. குளியலறைக்கு அருகில் உணவு சாப்பிடுவதும் வீட்டின் நேர்மறையான சூழலை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், உடைந்த அல்லது அழுக்கான பாத்திரங்களில் உணவு சாப்பிடுவதையும், இருள் அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் உணவருந்துவதையும் தவிர்க்க வேண்டும் என வாஸ்து குறிப்புகள் கூறுகின்றன. அதற்கு பதிலாக சுத்தமான, அமைதியான மற்றும் போதுமான வெளிச்சம் உள்ள இடத்தில் உணவு சாப்பிடுவது சிறந்ததாக கருதப்படுகிறது. கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி அமர்ந்து உணவருந்துவது சுபமாக இருக்கும் என்பதும் பாரம்பரிய வாஸ்து நம்பிக்கையாக உள்ளது.