அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், ஜெசிகா கோப்லாந்த் (வயது 37) என்பவர், தனது பிறந்த நாளைக் கொண்டாட லாஸ் வேகாஸுக்கு 2 வாரங்களுக்கு சென்றிருக்க, வீட்டில் தனது மகனையும் 7 நாய்களையும் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டிற்குள் நுழைந்தபோது, மலம் படிந்திருந்த தரை, சுற்றிலும் கழிவுகள் மற்றும் அழுக்குகள், உணவு மற்றும் குடிநீர் இன்றி சோர்வாக இருந்த நாய்கள் எனக் காட்சிகள் மனதை உடைக்கும் வகையிலிருந்தது.

வீட்டில் இருந்த டீனேஜ் சிறுவன், “இந்த வீடு பல வருடங்களாகவே இப்படித்தான் இருக்கு. அம்மா சுத்தம் பண்ணவே மாட்டாங்க,” என போலீசாரிடம் தெரிவித்தான். வீட்டின் புகைப்படங்களில் கார்ப்பெட்டுகள் முழுவதும் மலம், சுவர்களில் பெரிய ஒட்டைகள் காணப்பட்டன.

சிறுவனின் தகவலின்படி, ஜெசிகா கோப்லாந்த் ஜூலை 21ஆம் தேதி லாஸ் வேகாஸுக்கு பிறந்த நாள் கொண்டாட சென்றிருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் அவர் வீட்டுக்குத் திரும்பியபோது, போலீசாரும் அனிமல் கன்ட்ரோல் அதிகாரிகளும் நாய்களை காப்பாற்றுவதில் ஈடுபட்டிருந்தனர். அதேநேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
