ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், ஓடும் ரயிலின் முன்பக்கக் கண்ணாடியில் ஒரு பருந்து (ஈகிள்) மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து பாரமுல்லா – பனிஹால் ரயில் பாதையில், பிஜ்பெஹ்ரா மற்றும் அனந்த்நாக் ரயில் நிலையங்களுக்கு இடையில் நடந்துள்ளது. மோதல் மிகவும் பலமாக இருந்ததால், பருந்து கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து லோகோ பைலட் மீது விழுந்தது. மேலும், உடைந்த கண்ணாடித் துண்டுகள் பட்டதில் லோகோ பைலட்டுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்குப் பிறகு, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, காயமடைந்த லோகோ பைலட்டுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக, மோதிய பிறகும் பருந்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. பயணிகள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதி செய்தனர்.

“>

 

சிறிது நேரத்திற்குப் பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. இந்த விபத்துக்குப் பிறகும் லோகோ பைலட் தைரியமாகச் சூழ்நிலையைக் கையாண்டது, ரேடியோ மூலம் தகவல் தொடர்பு கொண்டது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதேபோல, கடந்த செப்டம்பர் மாதத்தில் பெங்களூருவுக்குச் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படுவதற்கு முன் ஒரு பருந்தின் மீது மோதியதால் விமானம் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.