உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் ஸ்கூட்டரில் சென்ற ஒருவருக்கு ஹெல்மெட் அணியாததற்காக போக்குவரத்து போலீஸார் விதித்த அபராதம், அவரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இணையத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அன்மோல் சிங்ஹால் என்ற அந்த ஸ்கூட்டர் ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட அபராதம் சுமார் ₹21 லட்சம் (₹20,74,000) ஆகும். ஆனால், அவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரின் விலையே வெறும் ₹1 லட்சம்தான் என்பதுதான் இதில் உள்ள முரண். அபராதத் தொகையுடன் கூடிய சலானின் புகைப்படம் சமூக ஊடகங்களில் காட்டுத் தீ போலப் பரவியது.

இந்தச் சம்பவம் முசாஃபர்நகரில் உள்ள நியூ மண்டி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. வழக்கமான வாகனச் சோதனையின்போது நிறுத்தப்பட்ட அன்மோல் சிங்ஹால், ஹெல்மெட் அணியாமல் இருந்ததுடன், ஸ்கூட்டரின் ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தவறினார். இதனால் போலீஸார் வாகனத்தைப் பறிமுதல் செய்து சலான் வழங்கினர்.
அபராதத் தொகை குறித்த சர்ச்சை எழுந்ததையடுத்து, போலீஸார் சலானை மறுஆய்வு செய்தனர். இதுகுறித்து முசாஃபர்நகர் போக்குவரத்துக் கண்காணிப்பாளர் அதுல் சவுபே விளக்கம் அளித்துள்ளார். மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 207-க்கு பிறகு ‘MV Act’ என்று குறிப்பிட மறந்ததால் தான், ₹207 மற்றும் ₹4,000 என்ற அபராதத் தொகைகள் இணைக்கப்பட்டு தவறுதலாக ₹20,74,000 என்று பதிவாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
பின்னர், தவறு திருத்தப்பட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட உண்மையான அபராதம் ரூ.4,000 மட்டுமே என்று போலீஸார் உறுதி செய்தனர்.
