பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மகளிடம் ஆன்லைன் கேமிங் தளம் வழியாக ஆபாச புகைப்படங்களை கேட்ட மர்ம நபரை மகாராஷ்டிர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ‘சைபர் விழிப்புணர்வு’ நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

தனது மகள் ஆன்லைனில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, அறிமுகமில்லாத நபர் ஒருவர் நட்பாகப் பேசி, பின்னர் அவர் ஒரு பெண் என்று தெரிந்தவுடன் ஆபாசப் படங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகள் உடனடியாக விளையாட்டை நிறுத்திவிட்டு தனது தாயிடம் புகாரளித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், தொழில்நுட்ப உதவியுடன் குற்றவாளியைக் கண்டுபிடித்து தற்போது கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தை முன்வைத்து பேசிய அக்ஷய் குமார், டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் இது போன்ற ஆபத்துகளில் சிக்கிக்கொள்வதைத் தடுக்க பள்ளிகளில் வாராந்திர சைபர் பாதுகாப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைன் மோசடிகள் மற்றும் மிரட்டல்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க விழிப்புணர்வு மட்டுமே சரியான வழி என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.