மும்பை முல்லுண்ட் ரயில் நிலையத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர். இந்த கோரச் சம்பவம் 13 வயது சிறுவனான அவர்களின் மகன் கண்முன்னே நடந்துள்ளது. அதாவது மும்பையைச் சேர்ந்த ராஜு குப்தா (42) மின்சாரப் பணியாளராக (Electrician) வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி புஷ்பாவிற்கும் இடையே நீண்ட காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. கணவரின் சித்திரவதை தாளாமல், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முல்லுண்ட் காவல் நிலையத்தில் புஷ்பா புகார் அளித்திருந்தார்.

பின்னர், தனது மூத்த மகனுடன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றவர், மீண்டும் மும்பை வரப் போவதில்லை என்ற முடிவில் இருந்துள்ளார். இதற்கிடையில் புஷ்பாவின் சகோதரரும், இந்திய ராணுவ வீரருமான கமலேஷ் குமார், கணவன்-மனைவி இடையேயான பிரச்சனையைத் தீர்த்து வைக்க முயன்றார். அவரது முயற்சியால் கடந்த மார்ச் 14-ஆம் தேதி புஷ்பா மீண்டும் மும்பை திரும்பினார். இருப்பினும், மீண்டும் தகராறு ஏற்படவே, புஷ்பா தனது சகோதரருடன் ஊருக்குத் திரும்ப முடிவு செய்து ரயில் நிலையம் சென்றார்.

ரயில் நிலையத்தில் தனது அடையாள அட்டைகள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் காணாமல் போனதை அறிந்த கமலேஷ் குமார், அது ராஜு குப்தாவிடம் இருப்பதை அறிந்து அவற்றை வாங்க வீட்டிற்குச் சென்றார். அப்போது ராஜு குப்தா, கமலேஷையும் புஷ்பாவின் மூத்த மகனையும் வீட்டிற்குள் வைத்துப் பூட்டிவிட்டு, தனது இளைய மகனுடன் ரயில் நிலையத்திற்கு விரைந்தார்.

ரயில் நிலையத்தில் இருந்த புஷ்பாவை தன்னுடன் வருமாறு ராஜு குப்தா அழைத்துள்ளார். ஆனால், இனி உன்னுடன் வாழ முடியாது என்றும் விவாகரத்து வேண்டும் என்றும் புஷ்பா கண்டிப்புடன் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜு குப்தா, கல்யாண் நோக்கி வந்த விரைவு ரயில் முன் புஷ்பாவைத் தள்ளிவிட்டார். இதில் புஷ்பா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தக் கொலையைச் செய்த பின், தனது 13 வயது மகனுடன் ராஜு குப்தா ரயிலில் ஏறி குஜராத் மாநிலம் சூரத் நகருக்குத் தப்பிச் சென்றார். ரயில்வே போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு, தொழில்நுட்ப உதவியுடன் ராஜு குப்தாவைச் சூரத்தில் வைத்துக் கைது செய்தனர். மேலும் தனது தந்தையே தாயைக் கொலை செய்ததை நேரில் பார்த்த சிறுவன், இந்தச் சம்பவத்தால் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளான். இது குறித்து போலீஸார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.